லார்ட்ஸ் கிரிக்கெட் : இந்தியா வெற்றி

படத்தின் காப்புரிமை Getty
Image caption தோனி, இஷாந்த் ஷர்மா, அலிஸ்டர் குக்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்டத் டெஸ்ட் தொடரில் 1-0 என்று இந்தியா முன்னணி பெற்றுள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இது இங்கிலாந்து தொடர்ச்சியாக அடைந்துள்ள பத்தாவது டெஸ்ட் மேட்ச் தோல்வியாகும்.

லார்ட்ஸ் மைதானத்தில் ஏற்பட்டுள்ள தோல்வியை அடுத்து, இங்கிலாந்து அணியின் தலைவர் அலிஸ்ட்டர் குக் மீதான அழுத்தங்கள் அதிகரித்து, அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆட்ட நாயகன் இஷாந்த் ஷர்மா

படத்தின் காப்புரிமை Getty
Image caption வெள்ளிக் களிப்பில் இந்திய வீரர்கள். நடுவில் இஷாந்த் ஷர்மா

இந்தியாவைப் பொருத்தவரையில், மூன்று ஆண்டுகள் மற்றும் 16 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர்.

ஆனால் இங்கிலாந்து அணி ஆடியுள்ள கடைசி ஒன்பது போட்டிகளில் இது ஏழாவது தோல்வி.

1992-93 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து இப்படியான தொடர் தோல்விகளைத் தழுவியுள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இரண்டாவது இன்னிங்ஸ்லில் இங்கிலாந்து அணியின் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி, தமது அணி வெற்றிபெற பெரிதும் உதவினார். அவரே ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

அதேபோல முதல் இன்னிங்ஸ்லில் புவனேஷ் குமார் 6 விக்கெட்டுகளைப் பெற்றது, ரஹானே சதமடித்ததும், அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவது டெஸ்ட் போட்டி, சவுத்ஹாம்பட்டன் நகரில் இந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்குகிறது.