பாராலிம்பிக் போட்டிகள்: இரண்டாவது தங்கம் வென்றது இந்தியா

பிரேசிலில் உள்ள ரியோ நகரில் நடந்து வரும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் (பாராலிம்பிக்) போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியின் , எப் 46 பிரிவில் கலந்து கொண்ட இந்திய தடகள வீரரான தேவேந்திர ஜஜாரியா, 63.97 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளதால், தேவேந்திர ஜஜாரியாவின் தங்கப் பதக்கத்தின் மூலம் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா, கடந்த 2004-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதினையும், 2012-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருதினை பெறும் முதல் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் தேவேந்திர ஜஜாரியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.