மட்டக்களப்பில் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை அனுராதபுரத்திற்கு மாற்றம்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் குடியிருப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்த காட்டு யானைகளில் 30 வயது மதிக்கத்தக்க யானையொன்று வனத்துறை அதிகாரிகளால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டுள்ளது.

Image caption மட்டக்களப்பு மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் தங்கியிருந்து ஊசி செலுத்தி தனியாக திரிந்த யானையை பிடித்தனர்

வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை பகுதியில் யானையின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்களாக அங்கு தங்கியிருந்து யானையை மடக்கிக் பிடித்துள்ளனர்.

மயக்க மருந்து ஊசி ஏற்றப்பட்டு, பிடிக்கப்பட்ட இந்த யானை புதன் கிழமை அனுராதபுரத்திலுள்ள மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே வெல்லாவெளி , பட்டிப்பளை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நெல் வேளாண்மை செய்கை மற்றும் தானியச் செய்கைகளும் தென்னை மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. வீடுகளும் கட்டிடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

காட்டு யானைகளை அகற்றக் கோரி உள்ளுர் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.