இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக மலையக தமிழர் நியமனம்

இலங்கை மேல் முறையிட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image caption ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம் ஏற்ற நீதிபதி சிதம்பரம் பிள்ளை துரைராஜா

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவியை வகித்த சிதம்பரம் பிள்ளை துரைராஜா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மேல் முறையிட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச வழக்கறிஞராக சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சேர்ந்த நீதிபதி துரைராஜா அந்த திணைக்களத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

நீதிபதியாக நியமிக்கப்படும் போது அவர் அந்த திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றி வந்தார்.

அவர் நேற்று மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

நீதிபதி துரைராஜா இரண்டு ஆண்டுகள் ஃபிஜி நாட்டின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.