இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண யாருடைய பங்களிப்பு தேவை? ரணில் யோசனை

இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.

Image caption யாழ்ப்பாண நிகழ்வில்

யாழ் அரச செயலகத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பலருடைய எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வந்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமே நாட்டில் அதிகாரங்களைப் பகிர்ந்திருக்கின்றது. பதின் மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இப்போது நாங்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டியிருக்கின்றது. இந்து சமுத்திரம் பொருளதாரத்தில் முக்கிய பிரதேசமாக இப்போது மாறி வருகின்றது. அதன் மத்தியில் இருக்கின்ற நாங்கள், அதன் மூலம் நன்மைகளைப் பெற்று முன்னேறுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதன் ஊடாகத்தான் நாங்கள் ஒரு சக்தி மிக்க நாடாக உருவாக முடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

அரசாங்கம் அமைக்கவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் எவரையும் துரத்திச் சென்று பழி வாங்குவதற்காக அமைக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, பாதிக்கப்பட்டவர்களுடைய மனங்களில் உள்ள துன்பங்களைப் போக்கி அவர்களுக்கு அமைதியை ஏற்படுத்துவதற்காகவே அது அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க யாழ்ப்பாணத்தில் வலியுறுத்தி கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல. பிரச்சினைகளுக்குத் தீரவு காண்பதற்காக உண்மையைக் கண்டறிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையொன்றையும் உருவாக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இந்த வைபவத்தில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ் அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளுக்காகப் அரசாங்கம் புதிய கட்டிடங்களைக் கட்டிக்கொடுப்பதை வரவேற்றுள்ளார். அதேநேரம், அதிகாரங்களையும் அகலமாக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டியது அவசியம் என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

மத்திய அரசாங்கமானது ஒரு தந்தையைப் போன்று வடமாகாண சபைக்கு அனுசரணை வழங்கிச் செயற்பட வேண்டும் என்றார் விக்னேஸ்வரன்.

வடமாகாணத்திற்குரிய கடமைகளை இழுத்தடித்துக் கொண்டு மத்திய அரசு தனக்னெ ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு செயற்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார் அவர்.

நமது தேவைகளையும் ஏழ்மையையும் பாதிப்புக்களையும் முன்வைத்து மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் வியாபாரம் செய்வதை நாங்கள் கண்டிக்கின்றோம். எமது தேவைகளைத் தாமே தான்தோன்றித் தனமாக நிர்ணயிப்பதையும் முதலீடுகளுக்குத் தமக்கு முற்பணம் தரவேண்டும் என்று லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார் அவர்.

தொடர்புடைய தலைப்புகள்