இலங்கை: மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை

இலங்கையில் 2014-ஆம் ஆண்டு நடந்த பாரிய இயற்கை பேரிழிவு என கருதப்பட்ட பதுளை மாவட்டம் மீரியபெத்தை நிலச்சரிவு அனர்த்தத்தின் போது குடியிருப்புகளை இழந்துள்ள பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வரும் தீபாவளிக்கு முன்னதாக நிரந்தர வீடுகள் கிடைக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

Image caption வீடுகள் வழங்குவது குறித்து அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆலோசனை

இன்று ( திங்கள் கிழமை) அப் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் அனுர பிரிதர்ஷன யாப்பா, இவர்களுக்கு என அமைக்கப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு அதனை கையளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அமைச்சருடன் மலையக புதிய கிராம அபிவிருத்தி பழனி திகாம்பரம் , ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் பதுளை அரசாங்க அதிபர் நிமல் அபேசிறி ஆகியோரும் அங்கு சென்றனர்.

இது தொடர்பான குடும்பங்களுக்காக மக்கள்தெனிய என்னுமிடத்தில் தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ள 75 வீடுகளையும் பார்வையிட்ட அமைச்சர் மின்சாரம் , குடிநீர் மற்றும் வீதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் துரிதப்படுத்துமாறு அதிகாரிளை பணித்துள்ளார்

20 மாதங்களுக்கு மேலாக நிரந்த குடியிருப்பு வசதிகள் கிடைக்காத நிலையில், அந்த பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கியுள்ளன.

Image caption வீடுகள் வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

வீடுகள் தீபாவளிக்கு முன்னதாக கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பு என அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அனுர பிரிதர்ஷன யாப்பா தீபாவளிக்கு முன்னதாக கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலச்சரிவில் புதையுண்டு குழந்தைகள் .பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தும், காணாமலும் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.