இலங்கை: ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கர்ப்பிணிகள் செல்வதை தவிர்க்க கோரிக்கை

இலங்கை கர்ப்பிணி பெண்கள் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என நாட்டின் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Image caption கொசுவினால் பரவும் ஜிகா வைரஸ்

இந்த வைரஸ் தொற்றினால் கர்ப்பிணி பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதனால், அவர்களே மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இயக்குநர் டாக்டர் பாலித மஹிபால இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் இதுவரையில் ஜிகா வைரஸினால் பாதிப்புக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படாவிட்டாலும், அந்த வைரஸ் இலங்கைக்குள் பரவும் சாத்தியத்தை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களை பரிசோதிப்பதற்காக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் பாலித மஹிபால தெரிவித்தார்.

உள்நாட்டில் டெங்கு நோய் பரிசோதனைக்கு வருபர்களை ஜிகா தொடர்பில் பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடுகளில் கர்ப்பிணி பெண்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய ஜிகா வைரஸ், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பரவியதன் பின்னணியில் இலங்கை சுகாதார அமைச்சின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்