யாழ் பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என அறிவிப்பு

சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image caption மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ் பேரணி நடைபெறுகிறது

எழுக தமிழ் என்ற மகுடத்தில், மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருக்கின்றது.

தமிழர் தாயகப் பிரதேசமாகக் கருதப்படுகின்ற வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்த வேண்டும், தமிழர் தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஷ்டி முறையிலான ஓர் அரசியல் தீர்வு வேண்டும், யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அதன் ஏற்பாட்டுக்குழு தெரிவித்திருக்கின்றது.

இந்தப் பேரணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளிக்க முன்வந்துள்ள போதிலும் தமிழரசுக் கட்சி அதில் கலந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றவற்றில் ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்தப் பேரணிக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் உபதலைவர் க.சிற்றம்பலம் தமிழ் மக்கள் பேரவையில் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்ற போதிலும், தமிழரசுக் கட்சி பேரவையின் பேரணியில் கலந்து கொள்ளாது என்ற தனது முடிவை அந்தக் கட்சியின் தலைவர்களுடனான சந்திப்பின் போது பேரவையின் முக்கியஸ்தர்களுக்குத் தெரிவிரிவித்திருக்கிறார்.

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவறதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சி செயற்பட்டு வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் இந்தப் பேரணியில் தமிழரசுக் கட்சி கலந்து கொள்வது முரண்பட்ட ஒரு செயற்பாடாகக் கருதப்படலாம் என்பதற்காகவே பேரணியில் கலந்து கொள்ளவில்லை என அந்தக் கட்சியின் தலைமையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது, அது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அரசியல் சக்தியாக செயற்படுவதற்காகவே உருவாக்கப்பட்டது என்று தமிழரசுக் கட்சியினரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆயினும் தமிழ் மக்கள் பேரவை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வ காண்பதற்குரிய அரசியலமைப்பு யோசனைகளைத் தயாரிப்பதற்கும், அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்ற செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே தமிழ் மக்கள் பேரவையின் பேரணிக்கு தமிழரசுக் கட்சி ஆதரவளிக்க மறுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்