இலங்கையில் ஹெராயின் பயன்பாட்டால் 17000க்கும் அதிகமானோர் பாதிப்பு

ஹெராயின் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட 17457 பேர் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library
Image caption ஹெராயின் போதைப்பொருள்

இன்று நாடாளுமன்றம் கூடிய போது, ஆளும் கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போது அவர் இதனை தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு நாடு முழுவதிலும் மேற்கொண்ட ஆய்வில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை காரணமாக பாதிக்கப்பட்டோர் 17457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சேனாரத்ன, இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதே போன்று, ஹெரோயின் போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுத்திட சிறப்பு சுகாதார திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேனாரத்ன தெரிவித்தார்.

ஆனால், இந்த புள்ளி விபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன இந்த தொகை மேலும் அதிகமாக இருக்க கூடுமென்று தெரிவித்தார்.

இக்கருத்துக்களை நிராகரித்த அமைச்சர் சேனாரத்ன உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்