இலங்கை: உரிமைகளை வலியுறுத்தி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையிலுள்ள அரசாங்க பாடசாலை அதிபர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி அதிபர்களும், ஆசிரியர்களும் இன்று (புதன்கிழமை) வீதியில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption இலங்கை ஆசிரிய அதிபர் தொழிற்சங்க ஓன்றியத்தின் போராட்டம்

ஆசிரிய அதிபர் தொழிற்சங்க ஓன்றியத்தின் ஏற்பாட்டில் தலைநகர் கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது

அங்கிருந்து லோட்டஸ் சுற்று வட்டம் ஊடாக காலிமுக திடல் வரை பேரணியொன்றும் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் பின்வருமாறு:-

  • 2009-ஆம் ஆண்டில் பாடசாலை அதிபர் சேவை தரங்களுக்கு நியமனம் பெற்ற பாடசாலை அதிபர்களுக்கு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் வழங்கப்பட வேண்டிய அடுத்த தரத்திலான பதவி உயர்வுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. இந்த பதவி உயர்வுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • போட்டிப் பரீட்சை மூலம் கடந்த மே மாதம் அதிபர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு வழமைக்கு மாறாக இதுவரையில் பாடசாலை பொறுப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. இவை விரைவாக வழங்கப்பட வேண்டும்.
  • தற்போது பாடசாலைகளில் பதில் அதிபர்களாக பணியாற்றுபவர்களை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்.
  • அரசியல் பழி வாங்கல் என்ற காரணத்தை முன் வைத்து அதிபர் சேவைகள் பிரமாண குறிப்பை மீறும் வகையில் அதிபர் நியமனங்கள் வழங்கப்படக் கூடாது.
  • 1998-ஆம் ஆண்டுக்கு பின்னர் நிறுத்தப்பட்டுள்ள முதலாம் தர அதிபர்களுக்கான தீர்வையற்ற வாகன அனுமதி பத்திர முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இது போன்ற கோரிக்கைகள் பிரதான கோரிக்கைகளாக முன் வைத்து நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Image caption இலங்கை ஆசிரிய அதிபர் தொழிற்சங்க ஓன்றியத்தின் போராட்டம்

இந்த கோரிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சுடன் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியும் தீர்வு எட்டவில்லை என்று ஆசிரிய - அதிபர் தொழிற்சங்க ஓன்றியத்தின் ஏற்பாட்டாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்