தமிழ் மக்கள் உரிமைக்காக யாழ்ப்பாணத்தில் பேரணி

Image caption எழுக தமிழ் பேரணி

வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் தீர்வு வேண்டும், யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டிருக்கின்றது.

Image caption உரிமைகளுக்காக போராட்டம்

எழுக தமிழ் என்ற மகுடத்தில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. சிவில் சமூக அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கியதே தமிழ் மக்கள் பேரவையாகும்.

Image caption எழுக தமிழ் பேரணி

இந்தப் பேரணியின் மூலம், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை என்பதை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பேரணி நடத்தப்படுவதாக தமிழ் மக்கள் பேரவை கூறியிருக்கின்றது.

Image caption யாழ்ப்பாணத்தில்

வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமாகிய விக்னேஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்நதவர்கள், தொழிற்சங்கவாதிகள், யாழ் பல்கலைக்கழக சமூகம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகியவற்றுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

Image caption எழுக தமிழ் பேரணி

இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோரின் உறவினர்கள், தமிழ்க் கைதிகளின் குடும்பங்கள், உறவினர்கள், இராணுவம் கைப்பற்றி நிலைகொண்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

Image caption எழுக தமிழ் பேரணி

யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஓர் அணியும் நல்லூரில் இருந்து ஓர் அணியுமாக இரு முனைகளில் இருந்து பேரணியாக வந்தவர்கள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒன்று கூடினர். அங்கு, கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

தொடர்புடைய தலைப்புகள்