இலங்கை: இனவாத குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக திஸ்ஸ அத்தனாயக்கவிற்கு உத்தரவு

இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குற்றப்பத்திரிக்கைகளை கையளிப்பதற்கு, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்கவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Image caption திஸ்ஸ அத்தனாயக்க (கோப்புப் படம்)

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, தேர்தல் சமயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விரம்சிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாட்டுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய ஒப்பந்தமொன்றை செய்துக்கொண்டுள்ளதாக ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணமொன்றை அவர் ஊடகங்களுக்கு காண்பித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் புகாரொன்றை சமர்ப்பித்தார்.

இந்த புகாரின்படி வழக்கு தாக்கல் செய்துள்ள சட்ட மா அதிபர் போலி ஆவணமொன்றை பகிரங்கப்படுத்தியதன் மூலம் திஸ்ஸ அத்தநாயக்க இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதன்படி சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தவறு புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் சமர்ப்பித்துள்ள குற்றச்சாட்டுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குற்றப்பத்திரிக்கைகளை கையளிப்பதற்கு அடுத்த மாதம் 19-ஆம் தேதியன்று ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தனாயக்கவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்