யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலி திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

பதினோரு நாட்கள் நீர்கூட அருந்தாமல் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியினரால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தமிழர் விடுதலைக் கூட்டணியச் சேர்ந்த ஆனந்தசங்கரி, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திலீபனின் நினைவு சின்னத்திற்கு தியாகச் சுடரேற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்; வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பாடசாலைகள், கல்லூரி கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த காவல்துறையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து இந்த உண்ணாவிரதத்தை திலீபன் மேற்கொண்டிருந்தார்.

இந்திய அமைதிப்படையினர், இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய வளவில் ஆரம்பித்த இந்த உண்ணாவிரதம் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி திலீபன் உயிர் நீத்ததுடன் முடிவடைந்தது.

ஆயினும் திலீபனுடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; இராசையா பார்த்திபன் என்பது அவருடைய இயற்பெயராகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுவந்தபோது, 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த திலீபன், யாழ் மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தபோதே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

விடுதலைப்புலிகள் செல்வாக்குடன் இருந்த காலப்பகுதியில் திலீபனின் நினைவு தினம் சிறப்பாக அனுட்டிக்கபட்டு வந்தது.

ஆயினும் கடும் யுத்த மோதல்கள் இடம்பெற்றதன் பின்னர் கடந்த பல வருடங்களாக இந்த நினைவுதினம் கைவிடப்பட்டிருந்தது.