படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்தவின் உடல் நாளை தோண்டியெடுக்கப்படுகிறது

கடந்த 2009ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பத்திரிகை ஆசிரியர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து நாளை ( செவ்வாய்க்கிழமை) தோண்டியெடுக்கப்படுகிறது.

Image caption லசாந்தவின் கல்லறைக்கு போலிஸ் பாதுகாப்பு

அவரது மரணம் குறித்து ஒரு புதிய விசாரணை தொடங்கியுள்ள நிலையில் , இந்த நடவடிக்கை வருகிறது.

அவரது உடலின் மீது புதிய பிரேத பரிசோதனை ஒன்று நடத்தப்படப் போவதாக இந்த மாதம் முன்னதாக அறிவிப்பு வந்ததிலிருந்து கொழும்பில் உள்ள அவரது கல்லறைக்கு ஆயுதந்தாங்கிய போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக ராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் சி்ல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

அவரது கொலை தொடர்பாக அவர் உடல் மீது முன்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகள் சந்தேகத்துக்குரியவையாக இருக்கின்றன என்று போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவரது உடலை தோண்டியெடுக்க உத்தரவிட்டது.

முன்பு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகளில் ஒன்றில் அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் மற்றொரு பிரேத பரிசோதனையில் துப்பாக்கிக் காயங்கள் ஏதும் இ்ருப்பதற்கான தடயமே இல்லை என்று கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில், இந்த கொலை குறித்த விசாரணை மறைக்கப்பட்டதாகக் கூறிய ஊடக அமைப்புகள் இந்த விசாரணையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தை வரவேற்றுள்ளன.

லசாந்த விக்ரமதுங்க `சண்டே லீடர்` என்ற வார பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவர் 2009ம் ஆண்டு ஜனவரியில் , கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வரும் வழியில் , நான்கு ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மஹிந்த அரசின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்த லசாந்த விக்ரமதுங்க , கொல்லப்படுவதற்கு முன் எழுதி, அவர் கொலை செய்யப்பட்ட பின் சண்டே லீடர் இதழில் பிரசுரமான தலையங்கம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தான் இரு முறை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்ட அவர், இந்த தாக்குதல்கள் அரசால் உந்தப்பட்டு நடந்ததாகத் தெரிவித்து, தான் இறுதியாகக் கொல்லப்பட்டால், அரசுதான் அந்தக் கொலையை செய்திருக்கும் என்று கூறியிருந்தார்.