இலங்கை: காணாமல் போனவர்கள் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணையில், ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பதிவுகள் தவிர்ந்த வேறு பதிவுகள் எதுவும் இல்லை என ராணுவ தரப்பு சாட்சி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Image caption முல்லைத்தீவு நீதிமன்றம் (கோப்புப் படம்)

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (வியாழக் கிழமை) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது, ராணுவ தரப்பில் மேஜர் ஜெனரல் மத்தும ராலலாகே கவீந்திர சாணக்கிய குணவர்தனவை மனுதாரர் சார்பிலான சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் குறுக்கு விசாரணை செய்தார்.

கடந்த விசாரணைகளில் சாட்சியமளிக்கையில் 58-ஆம் படைப்பிரிவினரிடம் இறுதி யுத்தத்தின் போது, ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான பதிவுகள் விபரங்கள் இருப்பதாக, ராணுவ தரப்பு சாட்சி தெரிவித்திருந்தார்.

அந்தப் பதிவேடுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும், ராணுவ தரப்பில் புனர்வாழ்வு ஆணையாளரினால் தயாரிக்கப்பட்ட, புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான பதிவுகளையே நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

இது தொடர்பிலான குறுக்கு விசாரணையின் போது, ராணுவ தரப்பில் சாட்சியமளித்த ராணுவ அதிகாரி இந்தப் பதிவைவிட வேறு எந்தப் பதிவும் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இது வரையில் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் இரு தரப்பு சட்டத்தரணிகளினதும் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் செய்யுமாறு கால அவகாசம் வழங்கிய நீதவான் விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

ராணுவ தரப்பில பிரதி மன்றாடியார் பி.குமாரரட்னம், மேஜர் ஞானக கேந்த துடுவலகே, மற்றும் ஞானகே ஹெரத் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேலுடன் சட்டத்தரணி கே.கணேஸ்வரன் வழக்கில் முன்னிலையாகியிருந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்