இலங்கையில் வறட்சி: குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஜனாதிபதி உத்தரவு

இலங்கையில் வறட்சியுடன் கூடிய கால நிலை நீடித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.

Image caption பொலநறுவை மாவட்டத்திலே பாதிப்பு அதிகம்

தற்போது நிலவுகின்றவறட்சியுடன் கூடிய கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை, நோய்கள் பரவுதலை தடுத்தல் மற்றும் வன விலங்குகள் எதிர்கொள்ளும் நீர்ப்பிரச்சினை போன்றன தொடர்பாக ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

வன விலங்குகள் எதிர்கொள்ளும் நீர் பற்றாக்குறை குறித்தும் கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுள்ளார்.

அரசு இடர் முகாமைத்துவ மையம் இறுதியாக வெளியிட்டுள்ள தகவல்களின் படி வடக்கு - கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுமார் 52 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் குடி நீர் பிரச்சினையை எதிர் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தொகையில் புத்தளம் , அம்பாரை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கப்படாத நிலையில் இந்த எண்ணிக்கை இதனை விட அதிகம் என சுயாதீன தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

Image caption குடிநீர் கோரி போராட்டங்களும் நடைபெறுகின்றன

நீர் நிலைகளும் நீர்த் தேக்கங்களும் வற்றி வருவதால் குடி நீரை அடிப்படை தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துமாறு அரசு நீர் வழங்கல் அதிகார வாரியம் பொது மக்களை கேட்டுள்ளது.

பொலநறுவ மாவட்டத்திலே பாதிப்பு அதிகம்; ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலநறுவ மாவட்டத்திலே கூடுதலானோர் குடி நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்கின்றார்கள்.

இம் மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 11 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை கிழக்கு மாகாணத்திலே கூடுதலான குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இம் மாகாணத்தில் 20 ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்த 70 ஆயிரம் பேர் குடி நீர் பிரச்சினையை எதிர்கொள்வதாக இடர் முகாமைத்துவ மையத்தின் தகவல் குறிப்பு கூறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் குடும்பங்களை கொண்ட 58 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்படுகின்றது.