மஸ்கெலியாவில் தோட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றத்தினால் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை பிபிசி
Image caption பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் போராட்டத்திற்காக கூடினர்

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக காலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அங்கு கூடிய வேளை போலிஸாரால் இந்த இடைக்கால தடை உத்தரவு பற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பொது மக்களுக்கு இடையுறுகள் ஏற்படலாம் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக் கூடும் என்ற காரணங்களை முன் வைத்தே போலிஸாரால் இந்த தடை உத்தரவு பெறப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.

தொழிலாளர்களின் போரட்டத்திற்கான தடை உத்தரவு பற்றி அறிவிக்கப்பட்ட போது தொழிலாளர்கள் ஆத்திரமடைந்தவர்களாக காணப்பட்டதாகவும் இதன் காரணமாக சில நிமிடங்கள் அங்கு பதட்ட நிலை காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஸ்கெலியா நகரிலுள்ள வர்த்தகர்கள் தங்கள் வியாபார நிலையங்களை மூடி ஆதரவை வழங்கியிருந்தனர்.

படத்தின் காப்புரிமை பிபிசி
Image caption போலிஸ் அறிவிப்பையடுத்து சில நிமிடங்கள் பதட்ட நிலை காணப்பட்டது

மஸ்கெலியா நகரில் வழமைக்கு மாறாக போலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட போலிஸ் பாதுகாப்பும் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

மலையக பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 620 ரூபாய் நாளாந்த சம்பளமாக வழங்கப்படுகின்றது இந்த தொகை ரூபா 1000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 10 நாட்களாக ஆர்பாட்டங்களிலும் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பள உயர்வு தொடர்பாக ஏற்கனவே தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்குமிடையில் கடந்த 18 மாதங்களில் 10 தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருந்த போதிலும் இதுவரை இணக்கப்பாடு ஏற்படவில்லை.

தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தும் வகையில் வாசக அட்டைகளையும் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்களின் அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை பிபிசி

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஆர்பாட்ட பேரணிகளை நடத்தியும் தோட்ட நிர்வாக மையங்களுக்கு முன்பாக ஒன்று கூடியும் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்கு தற்போது கிடைக்கும் நாளாந்த வேதனம் 620 ரூபாய் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ரூபா 1000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.

ஏற்கனவே இந்த கோரிக்கை தொழிற்சங்கங்களினால் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது முன் வைக்கப்பட்டு இறுதி பேச்சவர்த்தையின் போது ரூபா 720 வரை அந்த தொகை இறங்கியது.

படத்தின் காப்புரிமை பிபிசி
Image caption மஸ்கெலியா நகரில் கூடுதலான போலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றின் தலையீடு காரணமாக இந்த தொகை தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்தினால் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது வழங்கப்படும் சம்பளத்தை விட ஒரு சதம் கூட தங்களால் அதிகரிக்க முடியாது என்பதே முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடாகும்.