இலங்கை: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தால் இயல்பு நிலை பாதிப்பு

இலங்கையில் மலையகத்தின் பல பகுதிகளிலும், பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை போராட்டம் காரணமாக, இன்று (திங்கட்கிழமை) அந்த பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

Image caption ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள்

தங்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற ஒரு நாள் சம்பளமான 620 ரூபாய் என்பதை 1000 ரூபாய் ஆக அதிகரிக்க கோரி கடந்த 22-ஆம் தேதியில் தொழிலாளர்களினால் பொகவந்தலாவவில் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், தற்போது மலையகம் தழுவிய போராட்டமாக மாறியுள்ளது

இன்று (திங்கள் கிழமை) நுவரெலியா , கண்டி , மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பரவலாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Image caption ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள்

தங்கள் கோரிக்கையை தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திடம் வலியுறுத்தும் வகையிலான பதாதைகளையும், வாசக அட்டைகளையும் ஏந்தியவாறு இந்த ஆர்பாட்டத்திலும், சாலை மறியல் போராட்டத்திலும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Image caption பதாதைகளை ஏந்தி போராட்டம்

தொழிலாளர்கள் பிரதான சாலைகளில் டயர்களை போட்டு எரித்தும், சாலையில் அமர்ந்தும், ஆர்பாட்டங்களில் ஈடுபட்டதன் காரணமாக அவ்வழியாக ஒரிரு மணித்தியாலங்கள் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸாரால் அறிவிக்கப்பட்ட போதிலும், அதனையும் மீறி தொழிலாளர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் கந்தப்பளை , வட்டவளை உட்பட சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகளும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன. இருந்த போதிலும், அந்த தலைமைகள் மீதும் ஆர்பாட்டங்களில் கண்டண குரல்கள் தொழிலாளர்கள் தரப்பிலிருந்து ஒலிக்கின்றன.

தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 2-வது வாரமாக போராட்டம் தொடர்கிறது.

Image caption 2-வது வாரமாக தொடரும் தொழிலாளர் போராட்டம்

தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் இந்த போராட்டம் தொடர்பாக மௌனத்தையே தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்