இலங்கை: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி

இலங்கையில் மலையக பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் உரிய அமைச்சுக்கள் ஈடுபட்டுள்ள போதிலும், உடனடி தீர்வு காண்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.

Image caption இரு வாரங்களாக தொடரும் போராட்டம்

புதன்கிழமை தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன முன்னிலையில் நடைபெறவிருந்த தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும், கூட்டு ஓப்பந்த தொழிற்சங்கங்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பேச்சுவார்த்தை வரும் 13-ஆம் தேதி நடைபெறும் என.தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2013 மார்ச் மாதம் 31-ஆம் தேதியன்று ஏற்பட்ட இரு தரப்பினருக்குமிடையிலான கூட்டு ஓப்பந்தத்தின் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை . அடிப்படைச் சம்பளம் ரூபா 450 மற்றும் ஏனைய கொடுப்பணவுகள் என ரூபா 620 நாட் கூலியாக வழங்கப்படுகின்றது.

இரு வருடங்களுக்கு ஒரு தடவை கைச்சாத்திடப்படும் அந்த ஒப்பந்தமும் செயலிழந்து 18 மாதங்களாகிவிட்ட போதிலும், தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாயாக ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை காரணமாக இதுவரை புதுப்பிக்கப்படவில்லை.

Image caption தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்

தற்போது, கடந்த இரு வாரங்களாக தொழிவாளர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கை அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தாலும், நியாயமான சம்பள உயர்வை தீபாவளிக்கு முன்னதாக அவர்கள் எதிர்பார்த்து மலையகம் தழுவியதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் கைத் தொழில் அமைச்சர் நவீன் திஸநாயக்காவினால் அடிப்படை சம்பளம் 500 ரூபாய் உள்ளிட்ட 730 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான யோசனையொன்று, ஏற்கனவே முன் வைக்கப்பட்டிருந்தது. இந்த யோனையை இரு தரப்பும், ஏற்கனவே நிராகரித்திருந்தன.

நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்ததையில் இரு தரப்பும் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்த நிலையில் வேலை நாட்கள் தொடர்பாக முரண்பாடு தோன்றியதையடுத்து, இன்று புதன்கிழமை வரை பேச்சுவார்த்தை ஓத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்று (புதன் கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாத போதிலும், தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் தமது இறுதி முடிவை தொழில் அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்தது. தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தொழிற்சங்களை அழைத்து இது குறித்து தெரியப்படுத்தினார்.

Image caption பதாகைகளை ஏந்தி போராட்டம்

அந்த யோசனையில் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை விட வேலை நாட்கள் குறைப்பு தான் முக்கியத்துவம் பெறுவதால் தொழிற்சங்களினால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம், பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

''வாரத்தில் அடிப்படை சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பணவுகளுடன் 3 நாட்கள் வேலை. ஏனைய 3 நாட்களும் 500 ரூபாய் அடிப்படை சம்பளமும், பறிக்கப்படும் தேயிலை கொழுந்து நிறைக்கேற்ப மேலதிக கொடுப்பணவு வழங்க வேண்டும் என்று அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வருடத்தில் 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஓப்பந்தங்களில் கூறப்பட்டுள்ளன.

இதனை மீறி செயல்பட தாங்கள் தயார் இல்லை என தாங்கள் வழங்கிய பதிலை தொழில் அமைச்சர் தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.