இலங்கை: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 730 ரூபாயாக அதிகரிக்க தொழிற்சங்கங்கள் இணக்கமா?

இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 730 ரூபாய் ஆக அதிகரிக்க கூட்டு ஓப்பந்த தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 15-வது நாளாக தொடர்கிறது.

Image caption 15-வது நாளாக தொடரும் தொழிலாளர்களின் போராட்டம்

நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பதில் அளித்து உரையாற்றிய தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஒரு நாள் ஊதியமான 620 ரூபாய் என்பதை 730 ரூபாயாக அதிகரிக்க தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டி தொழிலாளர்களை போராட்டங்களைக் கைவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தொழில் அமைச்சரின் இந்த அறிவிப்பையும், வேண்டுகோளையும் நிராகரித்து தொழிலாளர்கள் இன்றும் போராட்டங்களிலும், ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

தங்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலையும், தினசரி அடிப்படைச் சம்பளம் 750 ரூபாய் அதிகரிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி இந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Image caption பதாகைகளை ஏந்தி போராடும் தோட்டத் தொழிலாளர்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு, அதிகரித்த கொடுப்பனவு நிலுவையுடன் வழங்கப்பட வேண்டும் என்று அவர்களால் வலியுறுத்தப்படுகிறது.

இப்போதுள்ள அதிகரிப்பு தற்போதைய வாழ்க்கை செலவுக்கு போதுமானதாக அல்ல என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இன்று (வியாழக்கிழமை) மலையகத்தில் 10-க்கும் மேற்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டங்கள் நடைபெற்றன.

தொழிலாளர்களினால் முன் வைக்கப்பட்டுள்ள 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரிக்கை, தற்போதைய சூழ்நிலையில் தோட்ட நிர்வாகங்களினால் ஏற்றக் கொள்ள கூடியது அல்ல அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டாக்டர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 730 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்