ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது - ஜோன் செனவிரட்ன

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது என தொழில் துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

Image caption தினக்கூலியை 730 ரூபாய் ஆக நிர்ணயம் செய்ய இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தெரிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 620 ரூபாய் தினக்கூலியை 730 ரூபாய் ஆக நிர்ணயம் செய்ய தோட்ட நிர்வாகங்களின் சம்மேளனத்திற்கும் கூட்டு ஓப்பந்த தொழிற்சங்களுக்கமிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை போராட்டத்தை கைவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை நிராகரிக்கும் வகையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்ங்கள் மலையகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.

Image caption இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது - ஜோன் செனவிரட்ன

தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள 2015 ஏப்ரல் தொடக்கம் சம்பள அதிகரிப்பு, அதற்கான நிலுவை மற்றும் வாரத்தில் 6 நாட்கள் வேலை ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ''சம்பளத்தை 1000 ரூபாய் ஆக அதிகரிக்க கேட்பது தற்போதைக்கு சாத்தியமற்றது உலக சந்தையில் தேயிலை, ரப்பர் ஆகிய பெருந்தோட்டத்துறையில் பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் தற்போது வழங்கப்படுகின்ற சம்பளத்தை அதிகரிக்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தி கூறியிருந்தன. ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு கட்டாயம் தேவை என்ற கோணத்தில் பார்த்து தான் ரூ. 730 ஆக அதிகரிக்க செய்திருக்கின்றோம்'' என்று கூறினார்.

வேலை நாட்கள் எண்ணிக்கை பற்றி இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை. அது பற்றி இன்னமும் பேச வேண்டியுள்ளது. அடுத்த சில தினங்களில் இரு தரப்புடனும் பேசி முடிவொன்றை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தொழிலாளர்கள் எதிர்பார்ப்பதுபோல் சம்பள அதிகரிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலுவையுடன் அவர்களுக்கு கிடைக்குமா? என்று அவரிடம் கேட்ட போது '' இந்த சம்பளம் அரசாங்கம் கொடுப்பது அல்ல. தோட்ட நிர்வாகங்கள் தான் கொடுக்க வேண்டும். அதனை கொடுப்பதற்கு லாபம் இருக்க வேண்டும்'' என பதிலளித்தார் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன.