தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ், வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பெருந் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கைக்கும், அவர்களுடைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புதனன்று ஆர்ப்பாட்டங்களும் பேரணியும் நடத்தப்பட்டிருக்கின்றன.

Image caption தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்திய மகளிர் அபிவிருத்தி நிறுவன உறுப்பினர்கள்.

வவுனியாவில் பொது அமைப்புக்களும் யாழ்ப்பாணத்தில் மகளிர் அபிவிருத்தி நிறுவனமும் இதற்கானஅழைப்வை விடுத்திருந்தன.

வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய வவுனியா பேரணியில் கலந்து கொண்டவர்கள் பேருந்து நிலையத்தில் குழுமியிருந்து ஆர்ப்பாட்டத்துடன் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் நகர வீதிகள் வழியாக அரச செயலகத்தைச் சென்றடைந்து அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமாரவிடம் மனு ஒன்றைக் கையளித்தனர்.

சத்திர சந்தியில் ஆரம்பமாகிய யாழ்ப்பாணம் பெண்களின் பேரணி வீரசிங்கம் மண்டபத்தில் சென்று முடிவடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் நகரசபை உபதலைவர் மோகன் (கே.சந்திரகுலசிங்கம்), பிரதீபன், வடமாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா, செந்தில்நாதன் மயூரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.

இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் அவர்களுடைய நாட்சம்பளம் ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட வேண்டும்.

இதற்கு அரசாங்கம் தோட்டக் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கம் என்பவற்றிற்கிடையிலான பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டத்தக்க வகையில் நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த பலரும் கூறினர்.

ஜனாதிபதிக்கு எழுதப்பட்டு, வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜரில், ஆங்கிலேயரால் பொய்யான வாக்குறுதிகள் மூலம் இந்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு இன்று நாடு செழிப்பதற்கும் அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதற்கும் காரணமாக இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான நாளொன்றுக்கு ரூ1000 சம்பளத்தையும் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலைக்கான உத்தரவாதத்தையும் வழங்கி, அவர்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவருமாறு கோரப்பட்டுள்ளது.