தேசிய நல்லிணக்க கொள்கை வரைவில் தான் புறக்கணிப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் புகார்

இலங்கையில் தேசிய நல்லிணக்க கொள்கை வரைவில் தான் புறக்கணிப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் , சக வாழ்வு மற்றும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறுகின்றார்.

Image caption நல்லிணக்கக் கொள்கை வரைவில் தான் புறக்கணிப்பு : அமைச்சர் மனோ கணேசன்

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தனது அதிருப்தியையும் கவலையையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.

இந்த சந்திப்பின் போது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தனது அமைச்சுக்கான நிதி குறைப்பு தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த இரு விடயங்கள் காரணமாக தான் ஒரிரு வாரங்களாக அரசின் மீது அதிருப்தியடைந்திருந்தாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க கொள்கை தொடர்பான யோசனை வரைவு அண்மையில் அமைச்சரவை பத்திரத்தில் இடம் பெற்றிருந்த போதிலும், தான் தெரிவித்த ஆட்சேபனை காரணமாக ஜனாதிபதி அந்த பத்திரத்தை ஒத்திவைத்ததாக அவர் கூறுகின்றார்.

அடுத்த ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் தனது அமைச்சுக்குரிய நிதியில் 50 சத வீத வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றார்.

தனது அமைச்சுக்கு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் நிதியுதவிகளை கருத்தில் கொண்டு திறைசேரி வழியாக கிடைக்கும் நிதியை குறைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவிக்கின்றார்

இந்த விடயங்கள் தொடர்பாக பிரதம மந்திரியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது தான் இந்த விவகாரங்களை நேரடியாக கையாண்டு உரிய தீர்வை பெற்றுத் தருவதாக அவர் உறுதியும் உத்தரவாதமும் வழங்கியதாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்