இலங்கையில் மின் உற்பத்தி பாதிப்பு , நடைமுறைக்கு வந்துள்ள மின்வெட்டு

நுரைச்சோலை மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதனால் இன்று திங்கட்கிழமை முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இலங்கையில் மின் உற்பத்தி பாதிப்பு , மின் வெட்டு அமல்

காலையில் இரண்டரை மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமுமாக மூன்றரை மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் திங்களன்று காலை இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே மின்விநியோகம் தடைப்படுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் பிந்நிய அறிவித்தலின்படி நாளை செவ்வாய்க்கிழமை முதல் காலையில் ஒரு மணித்தியாலமும், மாலையில் அரை மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

கொத்மலை தொடக்கம் அனுராதபுரம் வரையில் அதிக வலுவில் மின்விநியோகம் செய்யும் வடம் பழுதடைந்ததையடுத்து, அதிகூடிய கொள்ளளவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கருவிகள் பழுதடைந்து, அங்கு மின் உற்பத்தி தடைபட்டுப் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்தப் பழுதைத் திருத்துவதற்கு சில நாட்கள் எடுக்கும் என்றும் அதன் காரணமாகவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்திருக்கின்றது.

வடமாகாணத்தில் மன்னார், மன்னார் பரந்தன் புதுக்குடியிருப்பு விசுவமடு முல்லைத்தீவு நகரம் ஆகிய இடங்களில் திங்களன்று 2 மணித்தியாலங்களும், வவுனியாவில் நெளுக்குளம், பறையனாலங்குளம், பூவரசங்குளம் போன்ற பிரதேசங்களில் முக்கால் மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆயினும், யாழ் மாவட்டத்தில் காலையில் மின்சாரம் தடைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.