இலங்கை: வட மாகாண சட்டத்தரணிகள் அடையாள பணி புறக்கணிப்பு

நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாடுகளில் தலையீடு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வடமாகாண சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

இணையதளம் ஒன்றில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நீதிபதிகளை அவதூறு செய்யும் வகையில் தகவல்களை வெளியிட்டிருப்பதைக் கண்டித்தும், அந்த இணையதளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியும் இந்த பணி புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக தொலைதொடர்பு ஒழுங்கமைப்பு சபையின் கவனத்திற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Image caption வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு

சட்டத்தரணிகளின் பணிபுறக்கணிப்பு காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் வழக்க விசாரணைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

வழக்கத் தவணைக்காக நீதிமன்றங்களுக்கு வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆயினும் நீதிமன்றங்களின் உள்ளக பணிகள் வழமைபோல இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்