மட்டக்களப்பு: வழிபாட்டு தலங்களின் காணி உரிமை சர்ச்சைக்கு தீர்வு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற கிராமமான புனானையில்  இந்து மற்றும் பௌத்த வழிபாட்டு தலங்களின் காணி உரிமை தொடர்பான சர்ச்சைக்கு வியாழக்கிழமை சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பூசை வழிபாடு இன்றி காணப்படும் பிள்ளையார் ஆலயம்

மட்டக்களப்பு - பொலநறுவ  நெடுஞ்சாலையிலுள்ள புனானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் போருக்கு பின்னர் புத்தர் சிலை வைக்கப்பட்டு பௌத்த வழிபாட்டு தலமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி புனானை பிள்ளையார் ஆலயத்திற்குரிய காணி என்றும் அங்குள்ள இராணுவத்தின் உதவியுடன் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக  ஏற்கனவே ஆலய நிர்வாகம் பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடுகளையும் பதிவு செய்து கொண்டது.

தங்களின் ஆலயத்தை அந்த காணிக்குள் இருந்து விடுவித்து புனருத்தாரனம் செய்து வழிபாடுகளை மேற்கொளவதற்கு 5- 6 வருடங்களாக  மீளக்குடியேறிய தமிழ் மக்கள் முயற்சிகள் எடுத்தும் அங்குள்ள இராணுவமும் பௌத்த பிக்குவும் தடையாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி  யோகேஸ்வரன்  கூறினார்.

வியாழக்கிழமை இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை காணும் வகையில் உள்ளுர் மக்களால் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நாடாளுமன்ற உறுப்பினர்  சீனித்தம்பி யோகேஸ்வரன்

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்  சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, இராணுவ அதிகாரி, பிரதேச செயலக காணி அதிகாரியும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில்   பிள்ளையார் ஆலயத்திற்கு 40 பேர்    காணியும் பௌத்த வழிபாட்டு மையத்திற்கு 60 பேர்ச் காணியும் அளவை செய்து எல்லையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் புனானை கிராம அபிவிருத்தி சங்க தலைவரான ஜே. ஞானப்பிரகாஷம்.

தங்கள் கிராமத்தில் மீள்குடியேற்றம்  இடம் பெறும் முன்பே  அந்த காணியில்  புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

Image caption போருக்கு பின்னர் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

1971ம் ஆண்டு தொடக்கம்  அந்த  இடத்தில்  புத்தர்  சிலை இருந்துள்ளதாக புனானை பௌத்த வழிபாட்டு மையத்தை சேர்ந்த அளவை பித்தாலங்கா தேரோ இந்த சந்திப்பில் தெரிவித்தார்.

புனானை கிராம அபிவிருத்தி சங்கத்தின்  தலைவரான ஜே. ஞானப்பிரகாஷம்,  அந்த பகுதியில்  ஒரு சில  சிங்கள குடும்பங்களின் குடியிருப்புகள் இருந்துள்ளன. ஆனால் பௌத்த வழிபாட்டு மையங்கள் இருக்கவில்லை என்றார்.

தொடர்புடைய தலைப்புகள்