மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ரிஷாத் பதியுதின் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதின் கலந்து கொள்வது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

Image caption எதிர்ப்பு

மத்திய அமைச்சரான ரிஷாத் பதியுதின் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் இனிமேல் கலந்து கொள்வார் என அமைச்சரவை செயலாளரால் மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவர் கலந்து கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இம் மாதத்திற்கான கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது, அமைச்சர் ரிஷாத் பதியுதின் அதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது .

''அமைச்சரவையில் மூவினங்களையும் சேர்ந்த அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் ஒரு இனத்தை சார்ந்த ஒருவர் மட்டும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்வது ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல, '' என்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன்.

Image caption நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்

'' தமிழர்களையும் முஸ்லிம்களையும் கொண்ட ஒரு இனத்தை மட்டும் மையப்படுத்தும் இது போன்ற செயல்பாடுகள் குழப்ப நிலையை ஏற்படுத்துவதாக அமையும். ந்த விவகாரத்தை இன ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ தாங்கள் கையாளவில்லை '' என்றும் அவர் கூறுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசில் துணை அமைச்சர் , இராஜங்க அமைச்சர் , மாகாணத்தில் முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சரொருவர் என ஏற்கனவே நான்கு அமைச்சர்களை கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்ட அபிவிருத்தி குழுவில் இடம் பெற்றுள்ளார்கள் .

மாகாண அமைச்சரை தவிர ஏனைய மூவரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களாக கூட்டத்தை நடத்துகின்றனர் .

இதனை சுட்டிக்காட்டிய அவர் '' அமைச்சரவை அமைச்சரொருவர் கலந்து கொள்வதன் மூலம் மாவட்ட அபிவிருத்தியில் எதனையும் சாதித்துவிடப் போவதில்லை . அது அபிவிருத்தி குழு கூட்டத்தில் அவரது தலையீடாகவே அமையும் '' என்றும் குறிப்பிட்டார்