யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி நடந்த போராட்டத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு

யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்திப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கள் கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Image caption யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி நடந்த கவன ஈர்ப்பு போராட்டம்

யாழ் அரசு செயலகம், வடமாகாண ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு, ஏ9 நெடுஞ்சாலையை மறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

Image caption மாணவர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமும், வவுனியாவில் விரிவுரைகளைப் பறக்கணித்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் அரச செயலகத்தின் பிரதான நுழைவாயில்களை மறித்து நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக அரசு பணிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

Image caption யாழ் அரசு செயலகம் அருகே நடந்த போராட்டம்

சாலை மறிப்பு போராட்டம் காரணமாக ஏ9 நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.

அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண ஆளுனர் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிப்புடன் முடிவுக்கு வந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் காவல் கடமைக்கென எவரும் சமூகமளித்திருக்கவில்லை.

இதற்கிடையே சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன. இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய தலைப்புகள்