இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப பிரதமர் சிறப்பு அனுமதி

இலங்கையில் கிழக்கு மாகாண பள்ளிக் கூடங்களில் இரு வருடங்களுக்கு மேலாக காணப்படும் கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பதவிக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாக மாகாண முதலமைச்சர் செயலகம் கூறுகின்றது.

Image caption கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் 5200 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாகாண முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த அனுமதியை வழங்கியதாக முதலமைச்சர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் அனைத்து பாடங்களிலும் 5 ஆயிரத்து 250 வெற்றிடங்கள் இருப்பதாக மாகாண கல்வி அமைச்சு கூறுகின்றது.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைக்கு அதிகாரம் கிடைத்திருந்தாலும் அதற்கான நிதி மத்திய அரசிடமிருந்து தான் கிடைக்க வேண்டும். இதன் காரணமாக இந்த விவகாரத்தில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.

இம் மாகாணத்தில் கணிதம் - 434, விஞ்ஞானம் - 222 ஆங்கிலம் - 478 என பிரதான பாடங்களில் காணப்படும் 1134 வெற்றிடங்களை நிரப்புவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

Image caption இந்த நியமனத்திற்காக பட்டதாரிகளும் ஆதரவாக பலரும் குரல் எழுப்பினர்

கணிதம் -124, விஞ்ஞானம் - 250 ஆங்கிலம் - 1190 என்ற எண்ணிக்கையில் 1576 பேர் விண்ணப்பித்த நிலையில் ஆட்கள் தெரிவுக்கான போட்டிப் பரீட்சையும் நடைபெற்றன.

அனைத்து வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு மாகாண சபை தயார் நிலையில் இருந்தாலும் விஞ்ஞானம் - 157, கணிதம் - 66, ஆங்கிலம் - 167 என்ற எண்ணிக்கையில் 390 பேருக்கு நியமனம் வழங்குவதற்கான அனுமதியை தான் மத்திய அரசு வழங்கியிருந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கூறுகின்றார்.

பிரதமரிடமிருந்து கிடைத்துள்ள சிறப்பு அனுமதியை பயன்படுத்தி ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களிடமிருந்து ஆள்கள் தெரிவு இடம் பெற்று 1134 வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இது போன்று ஏனைய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் குறிப்பிடுகின்றார்

தொடர்புடைய தலைப்புகள்