யாழ் மாணவர்கள் மரணத்திற்கு நீதி கோரி சென்னையில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யாழ் மாணவர்கள் மரணத்திற்கு நீதி கோரி சென்னையில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அக்டோபர் 20ஆம் தேதி இரவில் இந்த மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் காவல்துறையை மாகாண அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை துணைத் தூதரகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் புதன்கிழமை காலையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இளந்தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கிடையில் இதே கோரிக்கைகாக நாம் தமிழர் கட்சியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. முந்தைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டவுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் மரணத்தைக் கண்டித்தும், மலையகத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.