இலங்கை: போதைப்பொருளுடன் இந்திய மீனவர்கள் கைது

மன்னார் மாவட்டம் அரிப்பு பகுதியை அண்மித்த கடற்பரப்பில் ஹெராயினுடன் மூன்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image caption கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயணித்த படகு

இந்த மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற் தொழிலில் ஈடுபடும் வகையில் இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Image caption கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை போதைப்பொருட்களையும், சந்தேகநபர்களையும், கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்திய மீனவர்கள் பயணித்த சிறிய ரக படகொன்றையும் கடற்படையினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, மன்னார் அரிப்பு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதியன்று கடற்படை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்புள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதனை தவிர்ப்பதற்கு கடற்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தமையை அடுத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்