பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்த யாழ் பல்கலைக்கழக நிர்வாக முடக்கம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி விரிவுரைகளைப் புறக்கணித்திருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளையும் முடக்கியிருக்கின்றனர். இணக்கப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கு வழமை திரும்பியிருக்கிறது.

Image caption இருவர் மாணவர்கள் கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 காவல்துறையினர் நவம்பர் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

பல்கலைக்கழக நுழைவாயிலைப் பூட்டி, துணை வேந்தர் வசந்தி அரசரட்னம் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், நிர்வாகத் துறை சார்ந்த பணியாளர்கள் எவரையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்திருந்தனர்.

ஆயினும் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிகழ்வொன்றிற்காக ஏற்கனவே வருகை தந்திருந்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் மாணவர் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்கள் நடத்த ஏற்பாடாகியிருந்ததையடுத்து, அதற்கு மட்டும் மாணவர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.

Image caption யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில் இரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இந்த மாணவர்கள் ஒருவர் துப்பாக்கிச்சூட்டிலும், அதனால் விபத்திற்குள்ளாகி இன்னொருவரும் உயிரிழந்தனர்

அமைச்சர் சுவாமிநாதனுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு மாத காலத்தில் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை செவ்வாய்க்கிழமை மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை கொழும்பில் சந்தித்துப் பேச்சக்கள் நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Image caption யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் சிவில் சமூக மையம் ஆகிய அமைப்புக்களும், ஈபிஆர்எல்எப் கட்சியும் இதனை வன்மையாக கண்டித்திருக்கின்றன

இந்த இணக்கப்பாட்டையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தொடர்புடைய தலைப்புகள்