யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பினர்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணை நடத்தப்படும், பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் அளித்துள்ள உறுதிமொழியையடுத்து, மாணவர்கள் விரிவுரைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன், நடராஜா கஜன் ஆகிய இருவரும் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டதையடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அந்த சம்பவத்திற்கு நீதி கோரி வகுப்புக்களை புறக்கணித்திருந்தனர்.

அத்துடன் இரு தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளையும் முடக்கியிருந்ததையடுத்து, மாணவர்களின் வேண்டுகோளுக்கமைய அமைச்சர் சுவாமிநாதனின் ஏற்பாட்டில், துணைவேந்தர் மற்றும் முக்கிய பீடாதிபதிகளுடன் மாணவ பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியையும் பிரதமரையும் செவ்வாயன்று சந்தித்துத் தமது கோரிக்கைகளை எடுத்துரைத்திருந்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதியும் பிரதமரும் இந்தச் சந்திப்பின்போது உறுதியளித்திருந்தனர்.

இதனையடுத்து மாணவர்கள் இன்று புதன்கிழமை வகுப்புகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

விரிவுரைகளுக்குத் திரும்புவதற்கு முன்னதாக யாழ் பல்கலைக்கழக மாணவ சிரேஸ்ட ஆலோசகர் உதயகுமார் தலைமையில் ஊடகவியலளார்களைச் சந்தித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், ஜனாதிபதியும் பிரதமரும் அளித்த உறுதிமொழியை ஏற்று விரிவுரைகளுக்குத் திரும்புவதற்குத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தனர்.

தமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் உரிய காலப்பகுதியில் நிறைவேற்றப்படாவிட்டால் தமது போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்று மாணவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கேள்வியுற்றதும் ஜனாதிபதி மிகவும் கவலையடைந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து பக்கசார்பற்றதும், சுதந்திரமானதுமான விசாரணைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் வேண்டுகோளுக்கமைய, மரண விசாரணை அறிக்கையை விரைவுபடுத்தவதற்கு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.

தொடர்புடைய தலைப்புகள்