சௌதியில் மர்மமாக இறந்துள்ளதாக கூறப்பட்ட இலங்கை பணிப்பெண் அடையாளம் காணப்பட்டார்

சௌதிஅரேபியாவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Image caption சௌதி அரேபியாவில் மர்மமான முறையில் மரணமடைந்ததாக கூறப்படும் பழனியாண்டி கற்பகவல்லி

மரணமடைந்த பெண், நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பெருந்தோட்டமொன்றை சேர்ந்த 39 வயதான பழனியாண்டி கற்பகவல்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

Image caption சௌதி அரேபியாவில் மர்மமான முறையில் மரணமடைந்ததாக கூறப்படும் பெண்

அந்நாட்டில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வீட்டுப் பெண்கள் தங்க வைக்கப்படும் நிலையமொன்றில் தங்கியிருந்த வேளையில், கடந்த 31-ஆம் தேதியன்று மரணமானார்.

இப்பெண்ணின் மரணம் குறித்து சமூக வலைத்தளங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

3 பிள்ளைகளின் தாயான இப்பெண் கணவனை விட்டு பிரிந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு சென்றிருந்தார்.

ஆரம்ப காலத்தில் எவ்வித பிரச்சினைகளும் இருக்கவில்லை . பின்னர் அவர் அங்கு கொடுமைப்படுத்தப்பட்டதாக உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக, கடந்த 27-ஆம் தேதியன்று நள்ளிரவு வரை தொலைபேசியில் உரையாடினார் என்றும், அதன் பின்னர் தொடர்புகள் இருக்கவில்லை என்று அவரது சகோதரரான பழனியாண்டி பரமசிவம் தெரிவித்தார்.

Image caption தாயை இழந்த சோகத்தில் பிள்ளைகள்

தமது சகோதரியின் மரணம் குறித்து பேஸ்புக் மூலமே தாங்கள் அறிந்து கொண்டதாகவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சகோதரியான பழனியாண்டி கலைவாணி கூறுகின்றார்.

சகோதரிக்கு ஏதோ ஊசி ஏற்றப்பட்டு' இம்மரணம் ஏற்பட்டதாக பேஸ்புக்கில் தகவல்கள் வெளியாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இம்மரணம் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இப்பெண் ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டு அந்நாட்டிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கான அந்நிலையத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியில் இவர் தங்கியிருந்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 இலங்கையர்கள் உள்பட வேறு நாட்டவர்களும் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த செய்தி குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம், இம்மரணம் குறித்த விசாரணைகளை சௌதி அரேபியா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்