இலங்கையில் தப்பிய ஐந்து இந்திய பிரஜைகள் மன்னார் கடற்பரப்பில் கைது

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற ஐந்து இந்திய பிரஜைகள், மன்னார் - பேசாலை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.

மன்னார் பேசாலை பகுதியில் மறைந்திருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேசாலை போலீசாருக்கு கிடைத்த தகவலொன்றின்படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடுப்பு முகாமிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் 7 இந்திய பிரஜைகள் தப்பிச் சென்றனர். அவர்களில் ஐந்து பேர்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மன்னார் நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், பேசாலை போலீஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

அத்துடன், ஏனைய இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

--

தொடர்புடைய தலைப்புகள்