முஸ்லிம் தனி சட்ட சீர்திருத்தத்திற்காக குரல் கொடுக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தல்

முஸ்லிம் தனியாள் சட்ட சீர்திருத்தத்திற்காக நாடளாவிய ரீதியில் குரல் கொடுத்து வருகின்ற பெண் செயற்பாட்டாளர்கள் தனிப்பட்ட நபர்களாலும், குழுக்களாலும் அச்சுறுத்தப்படுவதை பொது அமைப்புக்களைச் சேர்ந்தோரும், சமூகத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும், ஊடகத்துறை சார்ந்தவர்களும் தனி நபர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கண்டித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த பெண் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களைத் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கும் வகையில் கீழ்த்தரமான தொனியில் தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றனர்.

இக்குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், தம் மனைவியரை, சகோதரிகளை, மற்றும் மகள்களை இச்சட்ட சீர்திருத்த வேலைகளில் தொடர்ந்தும் ஈடுபட அனுமதிப்பதென்பது, இழிவான செயற்பாடுகள் என அந்த தொலைபேசி அழைப்புக்களில் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில், குறிப்பிட்ட பெண் உரிமைகள் சார் செயற்பாட்டாளர்களான பெண்களை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்கள், எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்பதுடன் உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளியிடப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டிருக்கின்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த அறிக்கையில், முஸ்லிம்களான நாங்கள் எப்பொழுதும் வன்முறை, பயமுறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களை பிரயோகிப்பதனை கண்டித்துள்ளோம். இத்தகைய அச்சுறுத்தல்கள் எமது சமூகத்தின் மீது தேசியவாத பௌத்த குழுக்களால் பிரயோகிக்கப்பட்ட போது அதற்கெதிராக நாம் ஒன்றிணைந்தோம் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க எமது சொந்த சமூகத்தின் அங்கத்தவர்களாலேயே இத்தகைய அணுகுமுறைகள் பிரயோகிக்கப்படுவதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் என்பது ஒரு சமாதானமான, சகிப்புத்தன்மையுள்ள, பன்மைத்தன்மையை அங்கீகரிக்கின்ற, வேறுபாடுகளை சமாதானமான முறைகளில் தீர்த்துக் கொள்ளும் ஒரு மார்க்கம் என்பதனை நாம் தொடர்ந்தும் உறுதிப்படுத்துவோம். இச்சட்டத்தைப் பொறுத்தளவில் இது நீக்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புக்கள் பரிந்துரைக்கவில்லை.

பெண்களினதும், சிறுமிகளினதும் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் இது சீர்திருத்தப்பட வேண்டும் என்பதனையே இவைகள் கோருகின்றன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

''நாம் சமூகத்திலுள்ள அனைத்து மார்க்க மற்றும் சிவில் சமூக அமைப்புக்களையும் ஒன்றிணைந்து பரந்துபட்ட கலந்துரையாடல்களில் முஸ்லிம் பெண்களின் உரிமைக்காக தம் உயிரை பணயம் வைத்து அயராது பாடுபடுகின்ற இந்த பெண்கள் செயற்பாட்டாளர்களின் அரிய பணியினை நாம் அங்கீகரிக்கின்றோம்'' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ள பெண்கள், எமது சமூகத்தின் சில பகுதிகளின் தரத்தை உயர்த்த உதவுவதற்காக தம் வாழ்க்கையினை அர்ப்பணித்துள்ளதுடன் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் முஸ்லிம்களின் சமய, அரசியல், சிவில், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகவும் வாதாடி வருகின்றனர்.

இஸ்லாத்தின் பெயராலான எந்தவொரு வன்முறையையும் அல்லது இழிவான நடத்தைகளையும் அல்லது அச்சுறுத்தலையும் நாம் ஆதரிக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ போவதில்லை. இத்தகைய செயல்களில் இந்த சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் ஜனநாயக ரீதியாகவும், கருத்தொருமித்தும் இணைந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.