இலங்கை பல்கலைக்கழகத்தில் பகடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை

இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற 'பகடிவதை' எனப்படும் ''ராக்கிங்'' எதிரொலியாக மருத்துவ பீட மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மருத்தவ பீடத்தின் 2 மற்றும் 3ம் ஆண்டுக்கான விரிவுரைகளும் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதியிலிருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

மருத்தவ பீட மாணவர்களின் பகடிவதை சார் செயல்பாடுகள் தொடர்பாக கூடி ஆராய்ந்த பல்கலைக்கழக பேரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக பதிவாளர் வி.காண்டீபன் கூறுகின்றார்.

வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், பகடிவதைக்கு துனை போகுதல், நிர்வாகத்தினால் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஓத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களுக்காகவே இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மீதான வகுப்புத் தடை 3 - 4 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.

பல்கலைக்கழக பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிக்க சென்ற வேளை அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகின்றது.

தொடர்புடைய தலைப்புகள்