இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணப்படி அதிகரிக்கப்படும்: ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணப் படி அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இன்று (திங்கள்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களின் மக்கள் சேவைகளை முன்னெடுத்துச் செல்ல ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை சில ஊடகங்கள் அடிப்படையற்ற முறையில் கண்டித்து வருவதாக குற்றம்சாட்டிய பிரதமர், கிராமிய பகுதிகளில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவைகளை முன்னெடுக்கும் போது பல விதமான சிக்கல்களை சந்திப்பதாக தெரிவித்தார்.

எனவே, மக்கள் சேவைகளை முறையாக மேற்கொள்ள அவர்களுக்கு வழங்கப்படும் பணப் படியை அதிகரிப்பது அவசியமென்று கூறிய பிரதமர் விக்ரமசிங்க, இதனை ஊடகங்கள் கவனத்திற்கு எடுத்து செயல்படுவது அவசியமென்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானமெதும் எடுக்கவில்லை என்று கூறிய பிரதமர் விக்ரமசிங்க அவர்களின் மாதாந்த ஊதியம் அதிகரிக்கப் படவேண்டுமென்று தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்