இலங்கையில் அரச மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு

இலங்கையில் அரச மருத்துவர்களின் முழு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று புதன்கிழமை மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

புதன்கிழமை காலை 8 மணி தொடங்கிய இந்தப் போராட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி முடிவடையும்.

அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள 2017ம் அண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவர்கள் சங்கம் கூறுகின்றது.

2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட யோசனைகள் அரச மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றது என்கின்றார் சங்கத்தின் இணைப்பாளரான டாக்டர் நலிந்த ஹேரத் .

குறிப்பாக தற்போது நடைமுறையிலுள்ள ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது, அரச ஊழியர்கள் மேலதிகமாக செய்யும் தொழில்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது, இலவச மருத்துவ சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தனியார் துறையினரிடம் வைத்தியசாலைகள் கையளிக்கப்படவுள்ளது போன்ற செயல்கள் இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

அரச மருத்துவர்களின் இந்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலைகளில் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு செயல்படுவதில் சிரமம் இருந்தது.

இருப்பினும் சிறுவர், மகளிர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகளிலும் மேலும் அவசர சிகிச்சை பிரிவுகளில் சேவை பாதிப்பு இன்றி மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவர் சங்கம் குறிப்பிடுகின்றது.