பல்கலைக் கழக வளாகத்திலிருந்து போலிஸ் நிலையத்தை அகற்ற தமிழ்- சிங்கள மாணவர்கள் ஆர்பாட்டம்

இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாகத்திலுள்ள போலிஸ் காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான சாலையில் வளாகத்திற்கு முன்பாக ஓன்று கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமுலை வளாகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களுக்கிடையில் சில வருடங்களுக்கு முன்னர் மோதலையடுத்தே குறித்த போலிஸ் காவல் நிலையம் அங்கு அமைக்கப்பட்டிருந்தது; குறிப்பாக சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்காகவே அது அமைக்கப்பட்டிருந்தது.

அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கையை தமிழ் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் கூட்டாக வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வளாகப் பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா உடனடியாக அகற்றப்பட வேண்டும்.. என்ற கோரிக்கையும் மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது

2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு கைவிடப்பட்டு அம்மாணவர்களுக்கு தொடர்ந்தும் விடுதி வசதி கிடைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மாபொல புலமைப்பரிசில் போன்ற கொடுப்பணவுகளில் வரி அறவீடு செய்வதற்கு நிறுத்தப்பட வேண்டும்,பரீட்சை முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு உரிய நேரத்தில் வெளியிடப்பட வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இது தொடர்பான வாசக அட்டைகளை ஏந்தியவாற கோஷங்களையும் எழுப்பினர்.

தொடர்புடைய தலைப்புகள்