இலங்கையில் யுத்தத்திற்கு பிறகும் மாற்றுத்திறனாளிகள் கவனிக்கப்படவில்லை என புகார்

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட போதிலும், யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்குரிய மேம்பாட்டுத் திட்டங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம் கூறுகின்றார்.

Image caption கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தின நிகழ்வு

கிளிநொச்சியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பிய அவர் யுத்தத்திற்குப் பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கென சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், மாற்றுத் திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இன்னும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக கால்களை இழந்தவர்கள், கழுத்துக்குக் கீழ் அல்லது இடுப்புக்குக் கீழ் அவயவங்கள் செயலிழந்தவர்கள், அவர்களுடைய வீடுகளில் முறையான மலசலகூட வசதிகள் இல்லாமல் பெரும் துன்பமடைந்துள்ளார்கள். குறிப்பாக பெண்கள் இதனால் பெரும் பாதிப்படைந்துள்ளார்கள் என்றார் அவர்.

Image caption வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம்

இருந்த போதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கென விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாண சுகாதார அமைச்சு மலசலகூடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மாற்று வலுவுள்ளவர்களான பெண்கள் பலர் குடும்பச் சுமைகளை சுமக்க வேண்டியிருந்த போதிலும், வாழ்வாதார உதவிகளின்றி அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

அரசாங்கத்தினாலும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் பல வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், வீட்டுத்திட்டங்களில் உள்வாங்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் குறிப்பாக சக்கர நாற்காலிகளில் நடமாடுபவர்களுக்கு அணுகுமுறை வசதிகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாதிருப்பது பெரும் குறைபாடாக உள்ளது என்றார் சுப்பிரமணியம்.

தொடர்புடைய தலைப்புகள்