இலங்கை மட்டக்களப்பில் சகஜ நிலை திரும்பியது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழையவிடாமல் போலிஸாரால் தடுக்கப்பட்ட பொது பல சேனா உட்பட கடும்போக்கு பௌத்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று(சனிக்கிழமை) நள்ளிரவுடன் திரும்பி விட்டனர்.

Image caption கூட்டத்தை கலைக்க தயார் நிலையில் காணப்பட்ட போலிஸார்

இதனையடுத்து அந்த இடத்திலும் மட்டக்களப்பு நகரிலும் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரை நீடித்த பதட்ட நிலை வழக்கத்திற்கு திரும்பியுள்ளது.

பொது பல சேனா உட்பட பௌத்த கடும்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும், பௌத்த அமைப்புகளும் கொழும்பிலிருந்து பொலநறுவ ஊடாக மட்டக்களப்பு நோக்கி வாகனங்களில் பயணித்த வேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையில் வைத்து போலிஸாரால் தடுக்கப்பட்டனர்.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி பௌத்த பிக்குகளும் பௌத்தர்களும் புறப்பட முயன்ற வேளை வீதித்தடைகளை போலிஸார் ஏற்படுத்திய நிலையில், அந்த இடத்தில் பதட்ட நிலை காணப்பட்டது.

Image caption மட்டக்களப்பு நகரில் பொது பல சேனாவிற்கு மக்கள் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய பௌத்த கடும் போக்காளர்கள், ரயில் பாதையிலும் நெடுஞ்சாலையிலும் அமர்ந்து கொண்டதால் அவ்வழியாக ரயில் மற்றும் தரை வழிப் போக்குவரத்தும் 10 மணிநேரங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்தது.

நீதிமன்ற தடை உத்தரவு எதிர்வரும் 16ம் திகதி வரை நடைமுறையில் இருப்பதால் அதனை தாங்கள் நடைமுறைப்படுத்தியதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பொதுபல சேனா வின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரைக்கு அண்மித்த பகுதியில் கூடியிருந்த உள்ளுர் மக்களின் போராட்டம் இரவு வரை நீடித்தது.

Image caption மட்டக்களப்பு நகரிலுள்ள விகாரை வீதி

அந்த இடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போலிஸாருக்கு மேலதிகமாக சிறப்பு அதிரடிப்படையினரும் இரவு நேர பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள விகாரை வீதியில் போடப்பட்டுள்ள போலிஸ் வீதித் தடை இதுவரையில் அகற்றப்படவில்லை. அந்த இடத்தில் தொடர்ந்தும் போலிஸார் பாதுகாப்பு கடமைகளில் காணப்படுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்