கருணா பிணையில் விடுதலை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் தளபதியும் முன்னாள் அமைச்சருமான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனை பிணையில் விடுதலை செய்யமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிணையில் விடுதலை

அமைச்சராக கடமையாற்றிய போது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பெற்றுக் கொண்ட ஒன்பது கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான வாகனமொன்றை அமைச்சு பதவி முடிவடைந்த பின்னர் மீண்டும் ஒப்படைக்க தவறிய குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட கருணாவை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

கருணா சார்பில் இன்று பிணை மனுவொன்றை சமர்ப்பித்த அவரது வழக்கறிஞர், சிறைச்சாலைக்குள் அவருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பிணை வழங்க வேண்டும் என்று கோரினார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருணாவை கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது வெளிநாட்டுப் பயணங்களை முடக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வாரம் ஒரு முறை போலிசாரிடம் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த கருணா , தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக கூறினார்.