முஸ்லிம் மாணவிகள் பர்தா, ஹிஜாப்புடன், ஆண்கள் தாடியுடன் தேர்வெழுத அனுமதி மறுப்பதாக புகார்

லங்கையில் தற்போது நடைபெறும் கல்விப் பொது தராதர சாதாரண தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகளை பர்தா மற்றும் ஹிஜாப் போன்ற உடை அணிந்துதேர்வு எழுதுவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமான இத் தேர்வு, எதிர்வரும் 17ம் வரை நடைபெறுகின்றது. இந்த தேர்வு பெறு பேறுகளை பொறுத்தே 12ம் தர கல்வி அதாவது கல்வி பொதுத் தராதர உயர்தர கல்வி தீர்மானிக்கப்படுகின்றது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் தொடர்பாக பரீட்சைகள் ஆணையரால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை காரணமாகவே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

பரீட்சார்த்தியொருவரின் ஆள் அடையாளம் தேர்வு எழுத முன்னர் மேற்பார்வையாளர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஏற்கனவே நடைமுறையிலிருந்த சுற்றறிக்கையாகும்.

இம் முறைவெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் ஆள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர் அவ்வாறு இருந்தவாறே தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசார ரீதியான அடையாளத்தை பிரதிபலிக்கும் உடைகளை அணிதல் , பாடசாலை அல்லாத பரீட்சார்த்திகளில் ஆண்கள் தாடியுடன் தோற்றுதல் போன்றவை தொடர்பாக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது.

கண்டி . அனுராதபுரம் , குருநாகல் , முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் அல்லாதவர்கள் மேற்பர்வையாளர்களாக பணியாற்றும் பரீட்சை மையங்களில் தான் இந்த பிரச்சினைகள் குறிப்பாக சிங்கள மேற்பார்வையாளர்கள் தான் இது தொடர்பான எதிர்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு பரீட்சார்த்திகளினால் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சைக்கு வந்த முஸ்லிம் மாணவிகள் பர்தா மற்றும் ஹிஜாப் போன்றவற்றை அகற்ற வேண்டும், ஆண்கள் தாடியை அகற்ற வேண்டும் என மேற்பார்வையாளர்களினால் நிர்ப்பந்திக்கப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன..

மாகாண முதலமைச்சர் , தேர்வுகள் ஆணையர் உட்பட உரிய தரப்பினரின் கவனத்திற்கும் அவர்களால் கொண்டு வரப்பட்டு அவ்வப்போது தீர்வு காணப்பட்டாலும் அது தொடர்பான நெருக்கடி நிலை தொடருவதாக கூறப்படுகின்றது

இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சட்டத்தரனி ஜே.எம் .லாகீர் '' அரசியல் யாப்பை மீறும் செயல் '' என்கின்றார்

தேர்வுகள் ஆணையரால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை காரணமாகவே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டும் அவர் அது ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்

''ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அவ்வாறு இருந்தே தேர்வு எழுத வேண்டும் என பரீட்சார்த்திகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம் . ஆனால் அவ்வாறு இருந்தே தேர்வு எழுத வேண்டும் என கூறப்படுவது முஸ்லிம்களின் மத ரீதியான கலச்சார ரீதியான உரிமைகளை மீறும் செயல் '' என்றும் குறிப்பிட்டார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜே.எம் . லாகிர்.

இது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது '' அரசாங்கமோ அல்லது கல்வி அமைச்சோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுதும் வேளை பர்தாவை கழற்றியிருக்க வேண்டும் என கூறவில்லை.ஆள் அடையாளத்தை பர்தாவை கழற்றி உறுதிப் படுத்திய பின்னர் அவர் வழமைபோல் அதனை அணிந்து தேர்வு எழுத முடியும்'' என்று பதில் அளித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்