அறிவியல் தகவல்கள்  குறித்து பேசும் புதிய நடனத் தயாரிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அறிவியல் தகவல்களைப் பேசும் நடன நாடகத் தயாரிப்பு – இலங்கையில் புதிய முயற்சி

கூத்தில் விஞ்ஞானம் கலந்த புனைகதை கூறவிழையும் முயற்சி ஒன்றை தான் மேற்கொண்டுள்ளதாக இலங்கையின் சிறந்த கூத்து ஆய்வாளரும் பேராசிரியருமான சி. மௌனகுரு கூறியுள்ளார்.

‘’கூத்தில் விஞ்ஞானப் புனைகதையை கூறவிழைவது’’ தான் அறிந்தவரை இதுவே முதல் தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Image caption அறிவியல் தகவல்கள் குறித்து பேசும் புதிய நடனத் தயாரிப்பு

சூரியக் குடும்பத்தின் பிறப்பு, மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்த விஞ்ஞானம், ‘’தோற்றம்’’ என்ற தலைப்பிலான தனது புதிய நடனத் தயாரிப்பில் முதலாவது பகுதியில் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ள மௌனகுரு அவர்கள், அதன் இரண்டாம் பகுதியில் மனிதன் இயற்கையை அழிக்க முயன்று, அதனால் தான் அழிவது குறித்தும், அதேவேளை மூன்றாவது பகுதியில், மனிதன் அழிந்ததால் ஒரு புதிய உயிரினம் தோன்றுவதான புனைவையும் காண்பிக்கவுள்ளதாக கூறுகிறார்.

அதேவேளை இந்த புதிய நடனத் தயாரிப்பில் கூத்துடன், பரதம் மற்றும் ஏனைய நவீன நடன வடிவங்களும் கலந்து இடம்பெறுவதாகவும் அவர் கூறுகிறார்.

கலப்பு நடனம்:

கூத்துடன் ஏனைய நடனவடிவங்களை கலப்பது அதன் அழிவுக்கு வழி செய்யாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதனை கடுமையாக மறுக்கிறார். தன்னுடைய இந்த சிறுமுயற்சியால் கூத்து அழிந்துவிடுமானால் அது வலிமையற்றது என்று பொருளாகிவிடும் என்று கூறும் மௌனகுரு, ஓடுகின்ற ஒரு பெரிய ஆற்றில் சிறிய அளவு நீரை அள்ளிக்கொள்வது மாத்திரமே தனது முயற்சி என்கிறார்.

அரங்கக் கலைகள் தொடர்பிலான தனது 60 வருட அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் மட்டக்களப்பில் அரங்க ஆய்வு கூடம் ஒன்றை மௌனகுரு நடத்துகிறார்.

பள்ளிக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு திறன்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றனவே ஒழிய அங்கு படைப்புத் திறன் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை என்று கூறும் 73 வயதான மௌனகுரு, படைப்பாளிகளே அதனைக் கற்பிக்க முடியும் என்றும் படைப்பாளிகளால் கற்றுக்கொடுக்கப்படாததால் படைப்புத் திறன் குறைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உருவாவது தனது அனுபவத்தில் அறிந்த உண்மை என்கிறார் அவர்.

கூத்தின் நவீன வடிவம்:

கூத்தின் மீதான தனது ஆர்வம் காரணமாக இந்த ஆய்வு கூடத்தில் கூத்துக்குள்ளாக ஒரு நவீன வடிவத்தை உருவாக்க தான் முயற்சிப்பதாகவும் அவர் கூறுகிறார். இதனை மரபில் இருந்து நவீனத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக அவர் வர்ணிக்கிறார்.

நவீனம் என்றால் ‘’மேற்கத்தைய’’ என்று பொருளல்ல என்று கூறும் அவர், நம்முடைய கலைவடிவங்களிலும் கூட இந்த நவீனத்துவம் இருந்திருக்கிறது என்கிறார்.

அதேவேளை மரபு வழிக்கூத்து காலங்காலமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளது அல்லது மாறி வந்திருக்கின்றது என்று கூறும் அவர், நவீனத்தை காணும் தனது முயற்சி தவறானதல்ல என்கிறார். இப்போது மரபு வழிக்கூத்து என்று கூறப்படும் கூத்திலேயே உடையில், பாடலில், ஆடலில் பலவகையான மாற்றங்கள் நடந்துவிட்டன என்றும் வட்டக்களரி என்பது மாத்திரமே, அதுவும் மட்டக்களப்பில் மாத்திரமே இன்னமும் மாறாது இருக்கின்றது என்றும் கூறுகிறார்.

அத்துடன் மரபை மாற்றுகிறார்கள் என்று குறைகூறுவோரை ‘’மரபறியாதார்’’ என்று அவர் விமர்சிக்கிறார்.