முடிவுக்கு வந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் பெற்ற செயலாளர் தொடர்பான சர்ச்சை

இலங்கையில் பிரதான முஸ்லிம் அரசியல் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் பெற்ற செயலாளர் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

Image caption உயர் பீட செயலாளர் மன்சூர் ஏ காதர்

இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து கட்சியின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயல்படுவது தொடர்பாக எவ்வித பிரச்சினைகளும் இல்லை என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கூறுகியிருக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் யாப்பு திருத்தம் செய்யப்பட்டு செயலாளர் நாயகம் என்ற பதவிக்கு புறம்பாக உயர் பீட செயலாளர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டிருந்த தேர்தல் ஆணையத்துடன் தொடர்பாடல் உரிமை, தேர்தல் வேட்பு மனுக்களில் ஓப்பமிடுதல் போன்ற உரிமைகள் உயர்பீட செயலாளருக்கு கிடைக்கும் வகையில் அந்த திருத்தம் செய்யப்பட்டு அது பற்றி தேர்தல் ஆணையத்திற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த அதிகாரங்களை பெற்றிருந்த கட்சியின் செயலாளர் நாயகம் எம். ரி ஹசன் அலி இது தொடர்பாக அதிருப்தியடைந்த நிலையில் தேர்தல் ஆணையகத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததையடுத்தே இந்த சர்ச்சை எழுந்திருந்தது

இந்த சர்ச்சை தொடர்பாக தெளிவு படுத்த நேற்று வியாழக்கிழமை வரை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தேர்தல் ஆணையகம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

Image caption செயலாளர் நாயகம் எம்.ரி ஹசன் அலி

புதன்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர் மட்ட குழு கூட்டத்தில் செயலாளர் நாயகம் கலந்து கொள்ளவில்லை . ஏற்கனவே பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றம் இல்லை என முடிவு எடுக்கப்பட்டு இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் செயலாளர் நாயகம் எம் . ரி ஹசன் அலிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து வெள்ளிக்கிழமை றவூப் ஹக்கீம் , எம். ரி ஹசன் அலி மற்றும் மன்சூர் ஏ காதர் ஆகியோர் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்து பேராளர் மாநாட்டு தீர்மானம் பற்றி விளக்கமளித்தனர்.

இதனை வெள்ளிக்கிழமை கண்டியில் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய றவூப் ஹக்கீம் தங்களால் வழங்கப்பட்ட விளக்கம் தேர்தல் ஆணையகத்திற்கு திருப்தியளித்திருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

கட்சியின் செயலாளர் நாயகம் தனது ஆட்சேபனையை விலக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள அவர் ''ஏற்கனவே பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில் தேர்தல் ஆணையத்துடன் கட்சியின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் உரிமை, தேர்தல் நியமன பத்திரங்களில் ஓப்பமிடுதல் போன்ற அதிகாரங்கள் கடந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் செயலாளராக அறிவிக்கப்பட்ட மன்சூர் ஏ காதர்க்கு வழங்கப்பட்டுள்ளது'' என்றும் கூறினார் .

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம். ரி ஹசன் அலியின் பெயர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தாலும் தேர்தலுக்கு பின்பு அவருக்கு அந்த பதவி கொடுக்கப்படாமல் வேறு இருவருக்கு வழங்கப்பட்டது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பதவியில் விலகி, அந்த பதவியை வழங்குதல் மற்றும் அடுத்த பேராளர் மாநாட்டில் யாப்பு திருத்தம் மூலம் செயலாளர் நாயகத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல் போன்ற உறுதிமொழி மற்றும் உத்தரவாதத்தை அடுத்தே இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அதனை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்