யாழ்ப்பாணத்தில் அரசு பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் பலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் அரசு பேருந்தும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்தும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வேன் ஒன்றும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வீதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.

உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள். விபத்து காரணமாக வேன் முற்றிலும் சிதைந்து போயுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்னர். இந்த வாகனத்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச பேருந்தில் பயணம் செய்தவர்களில் 11 பேர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வாகன விபத்துக்களினால் மோசமாக உயிரிழப்புக்கள் ஏற்படுவது குறித்து அக்கறை செலுத்தியுள்ள அரசாங்கம், போட்டிக்கு வாகனம் ஓட்டுதல், பிழையான முறையில் வாகனத்தை முந்திச் செல்ல முற்படுதல் உள்ளிட்ட ஏழு குற்றங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலுக்கு வாகன சாரதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த அறிவித்தல் வந்ததன் பின்னர் நாடு தழுவிய அளவில் வாகன விபத்துக்கள் குறைந்திருப்பதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இந்த மோசமான விபத்து நிகழ்ந்துள்ளது.