இலங்கை: தங்களை பயன்படுத்தி சிலர் சுய லாபம் அடைவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் யுத்த வடுக்களைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளை சாதகமாகப் பயன்படுத்தி சிலர் சுய லாபம் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் அமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது.

Image caption மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

மட்டக்களப்பு நகரில் இன்று (திங்கள் கிழமை) சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.

சமூக சேவைகள் தினைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஒன்றியமும் இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

Image caption கிழக்கு மாகாண மாற்றுத் திறனாளிகள் அமைப்பு குற்றச்சாட்டு

இந் நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஓன்றியத்தின் தலைவரான எஸ். பரமானந்தம் '' யுத்தம் தாண்டவமாடிய பூமியில் நூற்றுக் கணக்கான மாற்றுத் திறனாளிகள் யுத்தத்தின் வடுக்களாக , குறியீடுகளாக வாழ்ந்து வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.

''இந்த மாற்றுத் திறனாளிகளை பயன்படுத்தி சிலர் சுய லாபம் பெற்றிருப்பதை அறியும் போது அது கவலையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது '' என்றும் அவர் கூறினார்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை மீள கட்டியெழுப்ப முடியாமல் சொல்லொணாத் துயரத்தில் காணப்படும் இந்த மாற்றுத் திறனாளிகளை ஆற்றல் படுத்த மற்றும் வளப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அரசு மற்றும் அரசு சார்பற்ற துறை உட்பட சகல தரப்பும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் யுத்த வடுக்களை கொண்ட மாற்றுத் திறனாளியான அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளில் ஒருவரான எம். யதீஸ் ''இலங்கையில் இலவச கல்வி கிடைத்தாலும் இதுவரையில் மாற்றுத் திறாளிகளுக்கு ' பிரெயில்' முறையிலான பாட நூல்கள் வழங்கப்படுவதில்லை'' என்று யதீஸ் குறிப்பிட்டார்.

தற்போது அரச சேவையிலுள்ள இவர் '' பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி ' பிரெயில் ' முறையிலான பாடநூல்களையும் கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் '' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்