சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதி கோரி மன்னாரில் மீனவர்கள் சாலை மறியல்

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அங்குள்ள மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வீதியில் வாகனப் போக்குவரத்துக்களை இயக்க விடாமல், தடைகளைப் போட்டும், டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வீதிப் போக்குவரத்துக்குத் தடையேற்படுத்தப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதேவேளை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கட்சிப் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்து மீனவர்களுடன் பேச்சுக்கள் நடத்தினர்.

இன்று புதன்கிழமை காலை கடலுக்குச் சென்ற மீனவர்களைக் கடலில் இறங்கவிடாமல் தடுத்த கடற்படையினர் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முடியாது என தடுத்திருந்ததையடுத்தே தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுருக்குவலை உள்ளிட்ட சில வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என கடற்றொழில் திணைக்களம் தடை செய்துள்ளது. அந்தத் தடையுத்தரவைக் காரணம் காட்டியே கடற்படையினர் தாழ்வுபாடு மீனவர்களை மீன்பிடிக்கச் செல்லவிடாமல் தடுத்திருந்தனர்.

ஆயினும் திடீரென இவ்வாறு தடையுத்தரவை நடைமுறைப்படுத்தினால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ள மீனவர்கள் குறைந்தது இரண்டு வருடங்களாவது மாற்றுத் தொழிலுக்கான மீன்பிடி வலைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருக்கின்றனர்.

இதனையடுத்து, மீன்பிடித் துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஜனவரி 15 ஆம் திகதி வரையில் தற்காலிக அனுமதி பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து மீனவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்