வி.கே. சசிகலாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா தொடுத்த மனு தள்ளுபடி

அஇஅதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட சசிகலா புஷ்பாவுக்கு தகுதி இல்லை என்று அஇஅதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், சசிகலா புஷ்பா தொடுத்திருந்த வழக்கை இன்று (திங்கள்கிழமை) முடித்து வைத்தது.

Image caption சசிகலா புஷ்பா தொடுத்த மனு தள்ளுபடி

அ.தி.மு.க.வின் பொதுச்செயலராக வி.கே.சசிகலாவை நியமிக்க கூடாது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின்படி கட்சி உறுப்பினராக 5 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடிக்காதவர் வி.கே.சசிகலா என்பதால், அவர் பொதுச்செயலராக முடியாது என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட தேவையான விண்ணப்பம் வாங்க சென்ற சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்தும் சசிகலா தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.

இந்நிலையில் வி.கே.சசிகலாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பை இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் வழங்கினார்.

Image caption அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்ட வி.கே. சசிகலா

அதில் அ.இ.அ.தி.மு.க.வின் உறுப்பினராக இல்லாத சசிகலா புஷ்பாவுக்கு அக்கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட தகுதி இல்லை என்று அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தாக்கல் செய்த மனு ஏற்கப்படுகிறது என்றும், ஆகையால் சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்